புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கொண்டு வர அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக நகர, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியது: “மற்ற அரசியல் கட்சிகளோடு மாறுபட்ட கட்சிதான் பாஜக. மற்ற கட்சிகளில் அரசியல் தலைவரின் பிள்ளை, அவரது பேரன், கொள்ளுப் பேரன் என தொடர்ந்து அவர்கள் தான் பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலை இருக்கிறது. நிறைய கட்சிகளில் முன்னேறவும், முன்னோக்கி செல்லவும் விடமாட்டார்கள். ஆனால் பாஜகவில் சாமானியனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை கொள்கையாக கொண்டுள்ளது.
நாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையான தகுதி. மேலும் பொறுமை முக்கியம். கட்சியில் உழைத்தால் எந்த பொறுப்புக்கும் வர முடியும். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். பாஜகவை பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சியிலும் பாஜக இருக்க வேண்டும். கட்சியை பலப்படுத்துவதோடு மட்டுமின்றி நம்முடைய ஆட்சியையும் கொண்டு வர அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்” என்றார்.