புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தரப்பில் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் மற்றும் 3 புதிய நபர்கள் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜக அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் மற்றும் அக்கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த மாதம் 27-ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தங்கள் பதவிகளை துறந்தனர். நெடுநாட்களாக பதவிகளை கேட்டு வரும் வேறு சிலருக்கு இப்பதவிகளை வழங்குவற்காக பாஜக தலைமை இந்த முடிவை எடுத்தது.
இவர்களுக்கு பதிலாக, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோர் நியமன எம்எல்ஏ பதவிக்கும், ஜான்குமார் அமைச்சர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதற்கு விரைந்து அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் டெல்லியில் இருந்து இதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியது.
இந்நிலையில், 15 நாட்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) நியமன எம்எல்ஏக்கள் மூவருக்கும் அனுமதி கிடைத்தது. நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு வரும் 14-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சக துணை கமாண்டன்ட் கனிஷ்க் சவுத்ரி புதுச்சேரி தலைமைச்செயலருக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
அமைச்சர் பதவி வகித்த சாய் ஜெ.சரவணன் குமார் ராஜினாமா ஏற்கப்படுகிறது. புதுச்சேரியின் புதிய அமைச்சராக ஜான்குமாரை நியமிக்க அனுமதி தரப்படுகிறது. இதுதொடர்பாக யூனியன் பிரதேச அரசால் உடன் அரசாணை வெளியிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மத்திய அரசின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், “புதுச்சேரி முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஜான்குமார் பதவியேற்ற நாளில் இருந்து புதுச்சேரி அமைச்சராக நியமிக்க குடியரசுத்தலைவர் அனுமதி அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஜான்குமார் பதவியேற்பு நிகழ்வை வரும் 14-ம் தேதி நடத்த திட்டமிட்டு வருகின்றனர். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வரும் 15-ம் தேதி முதல் விடுப்பில் செல்லவுள்ளதால் அதற்கு முன்னதாக அமைச்சர் பதவியேற்பு நிகழ்வை நடத்தவுள்ளனர்” என்று தெரிவித்தனர்