புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று மத்திய அமைச்சரும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக மாநில பொதுக்குழு கூட்டத்தை தொடக்கி வைத்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா பேசியதாவது: பாஜக மற்ற கட்சிகளைவிட வித்தியாசமானது. இதர கட்சிகள் குடும்ப கட்சிகளாகவும், தனிநபரை சார்ந்த கட்சிகளாகவும் இருக்கும் நிலையில் பாஜக தொண்டர்கள் கட்சியாகும். மண்டல் தலைவராக இருந்து மத்திய அமைச்சராகியுள்ளேன்.
இது பாஜகவில் மட்டுமே சாத்தியம். பாஜக தொண்டர்களும் எம்பியாகவும், பெரிய தலைவராகவும் இம்மேடையில் அமர சாத்தியம் பாஜகவில்தான் உள்ளது. கொள்கை மட்டுமில்லாமல் நம் தாய் பூமியின் நன்மையே முக்கியக் குறிக்கோளாக நாம் கொண்டுள்ளோம். கட்சிக்காக மட்டுமில்லாமல் தேசத்துக்காகவும், பாரத மண்ணின் நலனுக்காகும் கட்சி பணியாற்றுகிறோம்.
வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு இதர கட்சிகள் பணியாற்றும் நிலையில் நம் வெற்றியானது பாரத மண்ணின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. பாரத மண்ணின் நலனுக்காகவே பணிகளை செய்கிறோம். வளர்ச்சியடைந்த பாரதம் அமைப்பதில் நம் நாடு முன்னேறி வருகிறது. இதற்காக பாஜகவினர் குறிக்கோளுடன் செயல்படவேண்டும். நமது மனதிலுள்ள அடிமைத்தனமான செயல்பாடுகளில் இருந்து வெளியே வரவேண்டும்.
நம் முன்னோர்கள் வழிகாட்டுதல்படி இக்குறிக்கோளை அடைய முடியும். அனைவரும் ஒவ்வொரு அடியை எடுத்து வைத்தால் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம். ‘மன் கி பாத்’ கேட்கும் தொண்டரைதான் எங்களுக்கு பிடிக்கும். ஜிஎஸ்டி குறைப்பு பிரசுரத்தை விநியோகிப்பது அவசியம். இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே விற்போம் என கடைக்காரர்களை உறுதிப்படுத்த வேண்டும்.
பாஜக தொண்டர்களால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், எம்எல்ஏக்கள் சாய் சரவணன்குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.