புதுச்சேரி: புதுச்சேரியில் கோடையைத் தாண்டி ஜூலையில் ஆறாவது முறையாக இன்று (ஜூலை 13) வெப்பம் சதம் அடித்தது.
புதுச்சேரியில் தற்போதைய ஜூலைதான் உண்மையான கோடைக்காலம்போல் உள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாமல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தப்படியே உள்ளது.
நடப்பாண்டு கோடையில் ஏப்ரலில் 12-ம் தேதிதான் முதல் முறையாக வெப்பம் 100.4 டிகிரியை தொட்டது.
அதையடுத்து மே மாதத்தில் 4-ம் தேதியன்று 100.6 டிகிரியும், 12-ம் தேதியன்று 102.6 டிகிரியும் பதிவானது. பிறகு கோடை மழை புண்ணியத்தால் வெப்பத்தின் தாக்கம் சரியத் தொடங்கியது. கத்தரி வெயில் காலத்தில் புதுச்சேரியில் 3 முறை மட்டுமே 100 டிகிரி தாண்டியது.
ஆனால் ஜூனில்தான் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயர்ந்தது. ஜூன் 1-ல் 101.5 டிகிரியும், 7-ம் தேதி 100.8 டிகிரியும், 8-ம் தேதி நடப்பாண்டில் அதிகளவாக 104 டிகிரியும், 9-ம் தேதி 100.4 டிகிரியும் வெப்பம் பதிவானது. அதுமட்டுமில்லாமல் ஜூன் முழுக்க 97 முதல் 99 டிகிரி வரை வெப்பம் பதிவானப்படியே இருந்தது.
ஜூலையிலாவது வெப்பத்தின் தாக்கம் குறையும் என பார்த்தால் உண்மையில் கோடைக்காலமே ஜூலைபோல் உள்ளது.
ஜூலை 5-ல் 100 டிகிரியும், 8 மற்றும் 9 ம் தேதிகளில் 100.6 டிகிரியும், 11-ம் தேதி100.2 டிகிரியும் பதிவானது. 12-ம் தேதி 100.4 டிகிரியும் இன்று 101.1 டிகிரியும் வெப்பம் பதிவானது.
நடப்பாண்டு ஏப்ரலில் ஒரு முறையும், மே மாதம் இரு முறையும் ஜூனில் 4 முறையும் ஜூலையிலோ கடந்த 11 தொடங்கி இன்று வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு (ஹாட்ரிக்) நூறு டிகிரி பதிவானது. இதனுடன் சேர்த்து நடப்பாண்டில் ஜூலையில் அதிகப்பட்சமாக 6 முறை நூறு டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது.