புதுச்சேரி: புதுச்சேரியில் சூதாட்ட சுற்றுலா கப்பலுக்கு அனுமதி அளித்த முதல்வர், ஆளுநருக்கு அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் சுற்றுலா நிறுவன சொகுசு கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக புதுவைக்கு 4-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை புதுவையில் இறக்கவும், புதிய பயணிகளை ஏற்றி இறக்கவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த திமுக- காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும் என்பதால் நம் மாநில கலாச்சாரம் சீரழியும் என கடுமையாக எதிர்த்தன. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் இந்த சொகுசு கப்பல் பயணம் வரும் ஜூலை 4-ம் தேதியில் இருந்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சொகுசு கப்பல் திட்டத்துக்கு அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சொகுசு கப்பலின் மூலம் பயணிகளை இறக்குவதிலும், ஏற்றுவதிலும் மிகப்பெரிய பாதிப்பு மீனவர்ளுக்கு ஏற்படும். கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த சொகுசு கப்பல் நிறுத்தப்படும். அங்கிருந்து பயணிகள் சிறிய படகுகள் மூலம் தரைப்பகுதிக்கு வருவர்.
முகத்துவாரம் வழியாக பயணிகளை ஏற்றி வரும்போது மீன்பிடி தொழில்கள் முழுமையாக பாதிக்கப்படும். மீனவர்களுடைய வலைகள் படகுகளால் சிக்கி சேதாரமடையும். விசிறு வலை தொழில் புரியும் உள்நாட்டு மீனவர்களும் சிறிய வலை மூலம் மீன்பிடி தொழில் செய்பவர்களும் பாதிக்கப்படுவர்.
உல்லாச கப்பல் புதுவையை வந்தடையும் போது சுற்றுலாப் பயணிகளால் பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். உப்பளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வம்பாகீரப்பாளையம் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். தற்போது உள்ள முகத்துவார கடற்கரை பகுதி சுற்றுலா சொகுசு கப்பல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.
ஒரு திட்டத்தை எதிர்க்கட்சியாக இருக்கும் போது ரங்கசாமி எதிர்த்தார். ஆளுங்கட்சியாக ஆன பின்பு அதே திட்டத்தை கொண்டு வருவது என்பது அரசு மீது மக்களின் நம்பிக்கையை இழக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதா ?
இதுபோன்று சமூக சமுதாய சீரழிவை ஏற்படுத்தக் கூடிய சொகுசு சீட்டாட்ட கப்பல் பயணத்திற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் எப்படி அனுமதி அளித்துள்ளார் என்று தெரியவில்லை. மக்களுக்கு எதிரான இந்த சொகுசு கப்பல் பயண திட்டத்தை அதிமுக முழுமையாக எதிர்க்கும்.
கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று மீனவ மக்களோடு அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். அரசு சொகுசு சீட்டாட்ட கப்பல் புதுவை வருவதற்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும். கூட்டணியில் அதிமுக இருந்தாலும் தவறு இருந்தால் தட்டிக் கேட்போம். நியமன எம்எல்ஏக்கள் பதவி நாங்கள் கேட்கவில்லை. குறுக்கு வழியில் செல்ல மாட்டோம். மக்கள் வாக்குகளை பெற்றுதான் சட்டப்பேரவைக்கு செல்வோம் என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.