புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்பி மீது பெண் எஸ்ஐ தெரிவித்த பாலியல் புகார் தொடர்பாக பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுவையில் சமீபகாலமாக தொடர் தவறினால் காவல் துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். காவல் துறையில் உச்சகட்ட கோஷ்டி பூசலும், புகார்களும், விரும்பதகாத பல்வேறு நடவடிக்கைகளும் நடக்கிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகளில் குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் மீது இடமாற்றம் போன்ற சிறிய அளவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுவையில் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது காவல் துறையின் உள் புகார் குழுவிடம், பெண் உதவி ஆய்வாளர் ஒரு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக நடைபெறும் விசாரணை தடையின்றி நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பெண் நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.