புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டாவது உலகத் திரைப்படத் திருவிழா வரும் 8 முதல் 3 நாட்களுக்கு அலையன்ஸ் பிரான்சிஸில் நடக்கிறது. இந்நிகழ்வில் தமிழ், பெல்ஜியம், ஸ்பெயின், ஈரான், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்கள் திரையிடப்படவுள்ளன. அதோடு, அனுமதியும் இலவசம் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தும் புதுச்சேரி இரண்டாவது உலகத் திரைப்படத் திருவிழா – 2025 வருடம் 8, 9 மற்றும் 10 தேதிகளில் புதுச்சேரி சுய்ப்ரோன் வீதியில் அமைந்துள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறவுள்ளது. எடிட்டர் ஸ்ரீகார் பிரசாத் விழாவினைத் தொடங்கி வைக்கிறார். ஸ்ரீகார் பிரசாத் 600-க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 9 தேசிய விருதுகளையும் பெற்றவராவார்.
தொடக்க திரைப்படமாக டோரி அண்ட் லோகிடா (TORI AND LOKITA) பெல்ஜிய – பிரெஞ்சு டிராமா திரைப்படம் திரையிடப்படும். 9-ம் தேதி காலை 9.15 மணிக்கு ஸ்பெயின் திரைப்படமான ஆப்டர்நூன் ஆப் சாலிடியூட் (AFTERNOONS OF SOLITUDE) திரையிடப்படவுள்ளது. நண்பகல் 12 மணிக்கு திரைப்படங்களின் எதிர்காலம் தலைப்பில் எடிட்டர் ஸ்ரீகார் பிரசாத் அவர்களுடன் இயக்குநர் சிவக்குமார் பங்கேற்கும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு லிவ்விங் (LIVING) திரைப்படம் திரையிடப்படவுள்ளது. மாலை 4.45 மணிக்கு ஈரான் திரைப்படமான மை பேவ்ரைட் கேக் (MY FAVOURITE CAKE) திரையிடப்படவுள்ளது. மாலை 6.45 மணிக்கு தமிழ் திரைப்படமான ‘மனிதர்கள்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
திரையிடலைத் தொடர்ந்து மனிதர்கள் திரைப்படத்தை உருவாக்கிய திரைக்கலைஞர்களுடன் பார்வையாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல், நடைபெறும். 3- வது நாளான 10-ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டு நாட்கள் திரையிடப்பட்ட திரைப்படங்கள் குறித்த கருத்துப்பதிவுகள் நடக்கும். அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு அர்ஜென்டினா திரைப்படம் தி டெலின்க்வென்ட்ஸ்” (THE DELINQUENTS) திரையிடப்படுகிறது.
மதியம் 2.15 மனிக்கு அமெரிக்க திரைப்படமான ஏ கம்ப்ளீட் அன்நோன் ( A COMPLETE UNKNOWN) திரையிடப்படுகிறது. மாலை 5 மணிக்கு நிறைவு விழா நிகழ்வுகளுக்குப் பின்னர் இறுதித் திரைப்படமாக இந்தி திரைப்படமான சிஸ்டர் மிட்நைட் ( SISTER MIDNIGHT) திரையிடப்படுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், “திரைப்படங்கள் பொழுது போக்கு சாதனங்கள் மட்டுமல்ல. நம் வாழ்வின் ஒரு அங்கம். அது யதார்த்தத்தைப் பேசும் ஒரு உன்னத காவியம். வாழ்வியலின் இன்ப துன்பங்களை ரசிக்கும் ஒரு உன்னத நிகழ்வினை ரசித்து ருசிக்க தயாராவோம். அனுமதி இலவசம்.” என்று தெரிவித்தனர்.