புதுச்சேரி: அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளத்தை தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார்.
திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான சிவா இன்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் இத்தனை அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கின்றன. அதற்கான நிதி ஒதுக்கீடு, வரவு– செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் மாதம் மாதம் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. தற்பொழுது நான்கு மாத சம்பள நிலுவையில் அவர்கள் பணியாற்றுவது கல்வித்துறை நிர்வாகத்தில் இருக்கிற சீர்கேட்டை தான் பிரதிபலிக்கிறது.
அத்துடன் ஆட்சியாளர்களின் அலட்சித்தன்மையையும், திறமையின்மையையும் காட்டுகிறது. நான்கு மாத சம்பளத்திற்கான மதிப்பீடு தயார் செய்து அனுப்பியும் அதை நிறைவேற்றாத ஒரு நிர்வாகத்தை நாம் வேறு என்ன சொல்வது. அத்துடன் 20 ஆண்டுகளாக அந்த பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், மறைந்தவர்கள், வேலையை விட்டு நின்றவர்கள் உண்டு.
அந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட 400 காலிப்பணியிடங்களை நிரப்பாமல் எப்படி பள்ளியை நடத்த முடியும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நிர்வாகம் கண்டுகொள்வதாக தெரியவில்லை. 7–வது ஊதியக்குழு பரிந்துரை 2017–ல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், இந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் 2023–ல் தான் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த ஆறு ஆண்டு நிலுவைத் தொகையை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக வழங்கிய நிலையில் ஏன் உதவி பெறும் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் சம்பளம், ஓய்வூதியம் இவைகளை 5 சதவீதம் பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமென்ற கண்டிப்பால் ஓய்வூதியதாரர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். அந்த 5 சதவீத தொகையை அவர்களே செலுத்தி அதன் பின் ஒய்வூதியம் பெறுகின்ற அவலத்தை கல்வித்துறை எப்படி அனுமதிக்கிறது.
மாதம் தோறுமான ஊதியத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். மாத கணக்கிலான தாமதத்திற்கு துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை பாய வேண்டும். இல்லையேல் புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுகின்ற 35 அரசு உதவிபெறும் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து இந்த அரசுக்கு எதிர்ப்பான போராட்டத்தை திமுக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.