புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அதிகார வரம்புக்கும் இடையே மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு இரட்டை எஞ்சின் ஆட்சி நடக்கிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டிள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநில அதிமுகவும், அம்மா அறக்கட்டளையும் இணைந்து வரும் 27-ம் தேதி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மெகா வேலை வாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் அதிகார மோதலினால் அரசின் பல்வேறு துறைகளில் இயக்குநர்கள் பதவி மற்றும் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
மீனவர்கள் பலர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து தங்களது சொந்த பணத்தில் சுற்றுலா படகுகள் வாங்கி அதனை இயக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக அதற்கான அனுமதியை அரசு வழங்கவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மீனவர்களோடு சென்று முறையிட்டுள்ளோம்.
ஆனால் முதல்வரின் உத்தரவை கேட்க இங்கு ஒரு அதிகாரிகள் கூட இல்லை. குறிப்பாக சுற்றுலாத்துறை இயக்குநர் ஏழைகளுக்கான அனுமதி வழங்குவதில் விருப்பமற்றவராக இருக்கின்றார். அவ்வப்போது வெளிநாடு, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இவர் சுற்றுலா செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
தனியார் சொகுசு கப்பல் வந்தால் அனைத்து அதிகாரிகளும், போலீஸாரும் அங்கு சென்று வரவேற்பதும், பாதுகாப்பில் ஈடுபடுவதும் செய்கின்றனர். உள்ளூர் மீனவர்களை இந்த அரசு அடிமைத்தனமாக நடத்துகிறது. புதுச்சேரி மெரினா கடற்கரையில் 32 கடைகள் கட்ட ஏலம் விடப்பட்டது. ஆனால் அனுமதியின்றி கூடுதலாக 68 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனையும் அரசு கண்டுகொள்வதில்லை.
தவறு செய்பவர்களுக்கு இந்த அரசு துணைபோகின்றது. முதல்வர் ரங்கசாமி அதிகாரம் இல்லை என்று பல இடங்களில் பேசுவார். ஆனால் அவருக்கு வேண்டிய வேலை முடிந்ததும் அவ்வாறு இல்லை என்று கூறுவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், இங்குள்ள நிர்வாகிக்கும் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கிறது.
அரசுக்கு அளிக்க வேண்டிய மரியாதை, மாண்பை வழங்க துணைநிலை ஆளுநர் மாளிகை மறுக்கிறது. துணைநிலை ஆளுநருக்கான முழு அதிகாரத்தையும் பெற்று தந்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பிரதமருக்கு ராகுல் காந்தியும், கார்கேவும் கடிதம் எழுதுகின்றனர். ஆனால் புதுச்சேரியை குறிப்படவில்லை. எனவே புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து பேச குறைந்தபட்ச தகுதிகூட காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. என்றார்.
அப்போது அதிகாரம் பெற மாநில அந்தஸ்து பெறுவதுதான் தீர்வு என்று முதல்வர் ரங்கசாமி பேசி வருகின்றாரே, ஆனால் அவர் ஏன் மாநில அந்தஸ்து கேட்டு ஒருமுறை கூட டெல்லி செல்லவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அன்பழகன், “நான் ரங்கசாமிக்கு வாய் அல்ல” என்று பதில் கூறினார்.