புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவை துணைத் தலைவரிடம் நேரு எம்எல்ஏ ராஜினாமா கடிதம் அளித்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு. இவர் ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார். இதனிடையே சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகளுடன் சென்று டெல்லியில் அவர் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் ஆளுநர், முதல்வர் அதிகார மோதலால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி இன்று காலையில் சட்டப் பேரவைக்கு வந்த நேரு அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையில் பட்டியலின மக்களுக்கு இடமில்லாத அமைச்சரவை எதற்கு ? உடனடியாக புதுச்சேரி சட்டப்பேரவையை கலைக்க வேண்டும். அதற்கு தனது முதல் ராஜினாமா கடிதத்தை கொடுக்கப்படுவதாக கூறி அவர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அங்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ் ஆகியோர் வந்தனர். போராட்டத்தை முடித்து கொள்ள முதல்வர் கேட்டு கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட நேரு தனது கோரிக்கை கடிதத்துடன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் சட்டப்பேரவை துணைத் தலைவரிடம் கொடுத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நானும், சமூக அமைப்புகளும் இணைந்து டெல்லி சென்று மாநில் அந்தஸ்தை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதனுடைய அழுத்தம் மத்திய அரசிடம் இருக்கிறது. நான் அளித்த கடிதத்துக்கும் பதில் கடிதம் வந்துள்ளது. இரண்டு நாட்கள் சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது. இனி அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து தகுதியை ஏற்படுத்தி தர வேண்டும். மாநில அந்தஸ்துக்காக எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை முதல்வரிடம் கொடுக்க காத்திருந்தேன்.
அவர் வராததால் அந்த கடிதத்தை முதல்வரிடம் சேர்க்கும்படி சட்டப்பேரவை துணைத் தலைவரிடம் கொடுத்துள்ளேன். மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கும் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட முன் வர வேண்டும். வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும்” என்றார். இந்நிகவில் எம்எல்ஏ நேருவுடன் பொதுநல அமைப்பினர் இருந்தனர்.