புதுச்சேரி: மத்திய அரசு, புதுச்சேரிக்கு ரூ.129 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கிமூலம் ரூ.4,750 கோடி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அதற்கான நிதி சொந்த வருவாய் மூலமாகவும், மத்திய அரசின் உதவியோடும் பல நிலைகளில் பணிகள் பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் நடந்து வருகிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கான சிறப்பு உதவிக்கான திட்டம் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ரூ.200 கோடி கொடுக்க அனுமதி அளித்திருக்கின்றது.
அதில் ரூ.129 கோடி ஒதுக்கி கொடுத்துள்ளது. புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் நிறுவுதல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தவும், விரிவான சுற்றுலா ஆய்வை வலுப்படுத்தவும் பேருந்து நிறுத்துமிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 14 பணிகளுக்கு பணியானை வழங்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிதியை பெறுவதற்கு பணிகளுக்கான திட்டங்கள் அனுப்பப்பட உள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.4,750 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் நடைபெறவுள்ள பணிகள் இரண்டு தவணையில் இந்த நிதி புதுச்சேரி அரசுக்கு கிடைக்கும். 50 ஆண்டுகள் கழித்து இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி மிகவும் குறைவு. இந்த நிதியில் வரும் 5 ஆண்டுகளுக்கு பணிகள் நிறைவேற்றப்படும்.
இதில் வாட்டர் சப்ளைக்கு ரூ.2,030 கோடி, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.1000 கோடி, பாதாள சாக்கடை திட்டம் ரூ.200 கோடி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாடு ரூ.1,170 கோடி உள்ளிட்டவை அடங்கும். ரூ.4750 கோடி கடன் பெறும்போது மக்கள் மீது வரிகள் எதுவும் விதிக்கப்படாது. பிஆர்டிசி ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயர்த்தி கேட்டனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தி கொடுத்துள்ளோம். பயணப்படி 25 சதவீதம் உயர்த்தி கேட்டனர். முதல்கட்டமாக உயர்த்திக்கொடுக்க கூறியுள்ளோம். இதனால் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்புவதாக கூறியுள்ளனர்.
மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேட்டரி சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் 25 பேருந்துகள் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கேட்டுள்ளனர். முதல்கட்டமாக ஊதிய உயர்வு உள்ளிட்டவை செய்துள்ளோம். அவர்கள் வைக்கும் எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியுமா என்று சொல்ல முடியாது. நிதிநிலைக்கு ஏற்ப செய்யப்படும் என்றார்.
அப்போது பல வளர்ச்சிப் பணிகள் நடப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் பொதுப்பணித்துறையில் நிறைய ஊழல் நடப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் எதையுமே செய்யமுடியாத அரசில் இருந்தவர்கள், தற்போது வளர்ச்சி பணிகள் நிறைய நடக்கும்போது மக்களிடம் ஏதேனும் குறையை சொல்ல வேண்டும் என்ற நிலையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
யார் வேண்டுமானலும் எது வேண்டுமானாலும் சொல்லாம். அவர்களால் ஒரு அரசு பணியிடத்தைக்கூட நிரப்ப முடியவில்லை. ஆனால் தற்போது 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்கட்சியில் இருப்பவர்கள் குறைசொல்கின்றனர். குறைகள் சொல்வது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று கூறினார்.
தொடர்ந்து மத்திய அரசு எல்லாவற்றையும் செய்தாலும் கூட மாநில அந்தஸ்து வழங்காமல் உள்ளதே என்ற கேள்விக்கு, மாநில அந்தஸ்து குறித்து வலியுறுத்தப்படும். அது நமது உரிமை. மத்திய அரசிடம் நிதிகேட்டு பெறுவது என்பது வேறு, மாநில அந்தஸ்து பெறுவது என்பது வேறு. மாநில அந்தஸ்து கேட்பதை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அந்த கோரிக்கை எப்போதும் இருக்கும். தேவைப்பட்டால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்.
கடலூர் மாவட்டத்துக்கு பிரதமர் வரவுள்ளார். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு, இருக்கலாம் என்றார். அமைச்சர் ஜான்குமாருக்கு எப்போது இலாகா ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, `எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்படும்’ என்று பதிலளித்தார்.
தொடர்ந்து முதல்வர் வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மழை தண்ணீர் வடிய பல நாட்கள் ஆனது. ஆனால் இப்போது 2 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துவிடுகிறது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.