கடந்த தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமானை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. இதனையடுத்து, 2026 தேர்தலுக்கு புதுக்கோட்டையில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம். இடம் காலியாகி இருப்பதால் புதுக்கோட்டையை நாமும் கேட்டுப் பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பாஜக தலைகள் மத்தியிலும் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக-வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வைத்தது தான் சட்டம். 2012-ல் புதுக்கோட்டை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானுக்கு வாய்ப்பளித்து அவரை ஜெயிக்க வைத்தார் ஜெயலலிதா. 2016 பொதுத் தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பளித்தார்.
அதேபோல் அம்மா அடையாளம் காட்டிய வேட்பாளர் என்பதால் 2021-லும் தொண்டைமானுக்கே சீட் கொடுத்தது அப்போதைய ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமை. இரண்டு முறை தொண்டைமானை எம்எல்ஏ ஆக்கியதில் விஜயபாஸ்கருக்கு முழுப் பங்குண்டு. ஆனால், இரண்டு தேர்தல்களில் வென்ற கார்த்திக் தொண்டைமானால் கடந்த முறை கரைசேர முடியவில்லை. இதையடுத்து கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி இருந்த அவர், அண்மையில் விஜயபாஸ்கர் மீதே பழிபோட்டுவிட்டு திமுக-வில் இணைந்தார்.
இதையடுத்து, 2026-ல் புதுக்கோட்டை தொகுதியையே கார்த்திக் தொண்டைமானுக்கு திமுக கொடுத்தாலும் கொடுக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், அதிமுக தரப்பில் புதுக்’கோட்டையை’ பிடிக்க பலரும் ரூட் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ப.கருப்பையாவை அதிமுக வேட்பாளராக நிறுத்தியதில் விஜயபாஸ்கரின் முயற்சி முக்கியமானது.
அந்த தெம்பில் கருப்பையா இப்போது புதுக்கோட்டைக்கு எம்எல்ஏ ஆகிவிடும் கனவில் இருக்கிறார். இவரைப் போலவே இளைஞரணி செயலாளர் வீ.பழனிவேல், முன்னாள் எம்எல்ஏ-வான நெடுஞ்செழியன் ஆகியோருக்கும் ஆசை அலையடிக்கிறது. ஆனால், எத்தனை பேர் ஆசைப்பட்டாலும் விஜயபாஸ்கர் யாரை டிக் அடிக்கிறாரோ அவருக்குத்தான் புதுக்கோட்டை சீட்.
அதிமுக நிலவரம் இப்படி இருக்க, கூட்டணி தோழனான பாஜக-வும் இம்முறை புதுக்கோட்டைக்கு குறிவைக்கிறது. கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காக்காட்டைச் சேர்ந்த முருகானந்தம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கம் வைத்துக் கொண்டு சோலார் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களை தனது சகோதரர் பழனிவேலுவுடன் சேர்ந்து எடுத்துச் செய்து வந்தார்.
வேலுமணிக்கு சொந்தமான இடங்களை லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத் துறையும் துழாவிய போது முருகானந்தம், பழனிவேல் சம்பந்தப்பட்ட இடங்களையும் கிளறினர். அடுக்கடுக்கான சோதனைகளை தாக்குப்பிடிக்க முடியாத முருகானந்தம் அதிமுக-விலிருந்து விலகி பாஜக-வில் தஞ்சமடைந்தார். பாஜக-வும் அவருக்கு மாவட்டப் பொருளாளர் பதவியை வழங்கி ‘கவுரவித்தது’. இதையடுத்து மாவட்டத் தலைவர் பதவிக்கும் படை திரட்டினார் முருகானந்தம். அது நடக்காமல் போய் மாநில நிர்வாகியான ராமச்சந்திரன் மாவட்டத் தலைவரானார்.
இப்போது இருவருமே ஆளுக்கொரு திசையில் அரசியல் செய்தாலும் இருவருமே விஜயபாஸ்கருக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் இருவருமே விஜயபாஸ்கர் சிபாரிசில் புதுக்கோட்டை சீட்டை பிடிக்க புது ரூட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இது குறித்து அதிமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “எங்கள் கட்சியைச் சேர்ந்த கருப்பையா புதுக்கோட்டை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தவர். அவரை மக்களவைத் தேர்தலில் இறக்கிவிட்டதே விஜயபாஸ்கர் தான். மணல் குவாரி பிசினஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் பணத்தை தாராளமாய் செலவழித்தார் கருப்பையா. அவர் இப்போது புதுக்கோட்டை தொகுதியை கட்டாயமாகக் கேட்கிறார்.
அதேபோல், புதுக்கோட்டை தொகுதியை பெறுவதற்காக எதுவும் செய்யத் தயாராய் இருக்கிறார் பழனிவேல். முன்னாள் எம்எல்ஏ-வான நெடுஞ்செழியனும் பிடிவாதமாய் இருக்கிறார். இப்படி மூன்று முக்கிய நபர்கள் மோதுவதால் யாருடைய பொல்லாப்பும் வராமல் இருக்க தொகுதியை பாஜக-வுக்கு தள்ளிவிடலாம் என நினைக்கிறார் விஜயபாஸ்கர். அதன்படி தொகுதி பாஜக-வுக்குப் போனால் தனக்கு மிகவும் நெருக்கமான ராமச்சந்திரனுக்குத்தான் அவர் சிபாரிசு செய்வார்” என்கிறார்கள்.
இது குறித்து ராமச்சந்திரனிடமே பேசினோம். “எங்களது கட்சிப் பணிகளால் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்ட பாஜக தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திமுக கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்களை தோற்கடிக்கும் வல்லமையும் எங்களுக்கு இருக்கிறது. இதையே தகுதியாகச் சொல்லி புதுக்கோட்டையை பாஜக-வுக்கு ஒதுக்கச் சொல்லிக் கேட்போம்.
இங்கு போட்டியிட எனக்கும் விருப்பம் உள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வினருடன் நல்ல நட்புறவில் இருப்பதால் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவருமே எனக்கு முழுமையான ஆதரவை அளிப்பார்கள். ஒருவேளை, தொகுதி எங்களுக்கு கிடைக்காமல் போனால் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக முழு மனதுடன் வேலை செய்து அவரை ஜெயிக்க வைப்போம். இம்முறை அமைச்சர் ரகுபதியே வந்து நின்றாலும் திமுக-வுக்கு இங்கு வேலை இல்லை” என்றார் அவர்.