வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்காமல், 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
2021 சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் விராலிமலையில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மீதமுள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் ஆகிய தொகுதிகளில் திமுகவும், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் முறையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.
தற்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. புதுக்கோட்டையில் திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தனித்தனியாக அண்மையில் நடைபெற்றது.
அதில், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி, திருமயம் மற்றும் அறந்தாங்கி ஆகிய 3 தொகுதிகளுக்கான கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் சீனியார், சக்தி ராமசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பேசும்போது, ”அறந்தாங்கியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக உள்ள திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனின் நெருக்கமான உறவினர் ஒருவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இவரும் அக்கட்சிக்கு செல்ல வாய்ப்பு இருக்கலாம் என்பதால் அறந்தாங்கி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும்” என பேசினார்.
அமைச்சர் ஆசையில்…: அதேபோல, வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை(தனி) மற்றும் விராலிமலை ஆகிய 3 தொகுதிகளுக்கான கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கவிதைப் பித்தன் பேசும்போது, “கடந்த தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் நானும் விருப்ப மனு கொடுத்திருந்தேன். வெற்றி பெற்று அமைச்சராகிவிடலாம் என்ற நியாயமான ஆசையில் இருந்தேன். ஆனால், தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிவிட்டனர். அந்தத் தேர்தலில் ஒரு கப் டீ கூட வாங்கிக் குடிக்காமல், பத்து பைசா கூட செலவு செய்யாமல் எம்.சின்னதுரையை வெற்றி பெறச் செய்தோம்.
ஆகவே, மறுபடியும் அதே கட்சிக்கு கொடுத்தாலும் சரி, திமுகவுக்கு கொடுத்தாலும் சரி வெற்றி உறுதி” என பேசிக்கொண்டிருக்கும் போதே, ”இந்த முறை தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது, திமுகவே போட்டியிட வேண்டும். கட்சித் தலைமையை கடுமையாக வலியுறுத்த வேண்டும்” என அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் பலரும் கூச்சலிட்டனர்.
பின்னர், அவர்களை அமைதிப்படுத்திய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ”கருத்துகளை கட்சித் தலைமைக்கு கொண்டு செல்கிறேன். முடிவை கட்சித் தலைவர்தான் எடுப்பார்” என தெரிவித்தார்.
அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை ஆகியோர் அவரவர் கட்சியின் தலைவர்கள் மூலம் திமுக தலைமையிடம் பேசி மீண்டும் சீட் பெற்று போட்டியிடுவதற்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது, 6 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என அக்கட்சினர் போர்க்கொடி தூக்கியுள்ளது கூட்டணிக் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.