சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையை மத்திய அரசு கடந்த 2006-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (‘கும்டா’) கடந்த 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. எனினும், 2021-ம் ஆண்டுக்கு பிறகே, தனியான நிர்வாக அமைப்புடன் இந்த அமைப்பு செயல்பட தொடங்கியது.
சென்னை பெருநகரின் தற்போதைய எல்லை மட்டுமல்லாது, விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கும் சேர்த்து, போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை இந்த ஆணையம் உருவாக்கி உள்ளது. இதில், இணைப்பு சாலை, டபுள் டெக்கர் உள்ளிட்ட பேருந்து வசதிகளை செயல்படுத்துதல், வாகன நிறுத்தம் உட்பட போக்கு வரத்துக்கான அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டுள்ளன. அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்களை வகுத்துள்ள கும்டா, முதல்வரிடம் இதற்கான ஒப்புதலை பெறுவதற்கான ஏற்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முதல்வர் தலைமையில் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கும்டா சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் கூறியதாவது: கும்டாவின் செயல்பாடுகள் தற்போது வேகம் எடுத்துள்ளன. சமீபத்தில், தலைமைச் செயலர் தலைமையில் 2 முறை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒரே பயணச்சீட்டில் பல்வேறு பொது போக்குவரத்தில் மக்கள் பயணிக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு, முதல்வர் தலைமையில் விரைவில் நடக்க உள்ள கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். கடந்த 4 ஆண்டுகளில் போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை கும்டா படிப்படியாக மேற்கொண்டது. இதுவரை சேகரித்த தரவுகளின் அடிப்படையில், வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழு, 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆணைய குழுவை கூட்டி அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.