மதுரை: தமிழக புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு மதியம் வரை கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆக. 31-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் அல்லது பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளது. தமிகத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் வைத்திருக்க ஆளும் திமுக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காதல் விவகார படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் டிஜிபி பணியிடம் முறையாக நிரப்பப்பட வேண்டும். டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் பிறப்பித்துள்ளன. அந்த வழிகாட்டுதலின்படி புதிய டிஜிபிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை தொடங்க வேண்டும்.
அவ்வாறு எந்த பணியும் தமிழகத்தில் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுக்கு பிறகு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கவோ, பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவோ தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “டிஜிபி நியமனம் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அது முறையாக பின்பற்றப்படுகிறதா?” என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஏற்கெனவே 2 வாரம் கால அவகாசம் வழங்கியாகிவிட்டது. அதற்கு பிறகும் கால அவகாசம் கேட்பது சரியல்ல. தமிழக உள்துறை முதன்மைச் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று பிற்பகலுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.