சென்னை: தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சங்கர் ஜிவால் ஆக. 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீனியாரிட்டி அடிப்படையில் 1990-ல் தேர்வாகி தற்போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், 1992-ல் தேர்வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்குமார், அதே ஆண்டில் தேர்வான காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் டிஜிபிக்களான அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே உள்ளனர்.
வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்னரே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பிவைக்கும். அதில், எந்த குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத சீனியாரிட்டி மற்றும் தகுதியின் அடிப்படையில் முதல் 3 இடங்களில் உள்ளோரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பி வைக்கும். அதில், ஒருவரை தேர்வு செய்து தமிழக அரசு புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும். இதுதான் நடைமுறை.
இந்நிலையில், ஆக. 31-ம் தேதியுடன் டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான 8 பேர் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போதைய டிஜிபிக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 8 அல்லது 9 மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே புதிய டிஜிபி, தங்களுக்கு சாதகமானவராக இருக்க வேண்டும் என தமிழக அரசு விரும்புவதாகவும், அதனாலேயே புதிய டிஜிபி தொடர்பான பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்போது கூடுதல் டிஜிபிக்களாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பால நாகதேவி உள்ளிட்டோருக்கு வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
எனவே, இவர்களையும் சேர்த்து டிஜிபி பட்டியலில் உள்ள யாரையாவது ஒருவரை பொறுப்பு டிஜிபியாகவோ அல்லது சிறப்பு டிஜிபியாகவோ சில மாதங்கள் நியமிக்கலாம். அதன் பிறகு தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் ஆணையம் யாரையாவது ஒருவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் வரை அமைதி காக்கலாம் என தமிழக அரசு நினைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுக்குபிறகு, பொறுப்பு டிஜிபி நியமிக்கவும் சங்கர் ஜிவாலின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவும் இடைக்கால தடை விதித்தும் டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு உடனடியாக தயார் செய்ய உத்தரவிடவும் கோரியும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்துக்கு புதிய டிஜிபியா, பொறுப்பு டிஜிபியா அல்லது சிறப்பு டிஜிபியா என போலீஸார் குழப்ப நிலையில் உள்ளனர்.