சென்னை: ‘ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்துறை சார்பில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற காய்கறி விதைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதைத் தொகுப்புகளையும், விரைவில் பலனளிக்கும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் அடங்கிய 9 லட்சம் பழச்செடி தொகுப்புகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் அடங்கிய ஒரு லட்சம் பயறு வகை விதைத் தொகுப்புகள் ஆகியவற்றையும் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், தலா 5 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், ரூ.103.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலக கட்டிடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
கால்நடை பராமரிப்பு: அதைத்தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூ.25.15 கோடி செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு, ஒரு கால்நடை மருத்துவமனை, 12 கால்நடை மருந்தகம், 2 மாவட்ட கால்நடை பண்ணைகள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க மையம் ஆகியவற்றுக்கான கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
கருணை பணி: மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறைகளின் செயலர்கள் தட்சிணாமூர்த்தி, சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.