புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சராக பாஜகவின் ஜான்குமார் நாளை பதவியேற்கிறார். இதையொட்டி மட்டன் பிரியாணி ஆயிரம் பேருக்கு தருவதாக அறிவித்துள்ளார். இவரது பதவியேற்புக்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி பாஜகவில் கோஷ்டிபூசல் நிலவியது. 6 எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சர் பதவியும், சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் தரப்பட்டது. எஞ்சிய பாஜக எம்எல்ஏக்களும் பதவி கோரி வந்தனர். இதில் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் உடன் இணைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்விக்கு பிறகு வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிரடி முடிவு எடுத்தது. புதுவையில் கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜக அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், அக்கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கடந்த மாதம் 27-ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் தங்கள் பதவிகளைத் துறந்தனர்.
நெடுநாட்களாக பதவிகளை கேட்டு வரும் வேறு சிலருக்கு இப்பதவிகளை வழங்குவற்காக பாஜக தலைமை இந்த முடிவை எடுத்தது. அதைத்தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகி பதவியேற்றார். பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், ஜிஎன்எஸ் ராஜசேகரன் ஆகியோர் நியமன எம்எல்ஏ பதவிக்கும், ஜான்குமார் அமைச்சர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர். ஆனால் டெல்லியில் இருந்து இதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கு பிறகு அனுமதி கிடைத்தது. நாளை பதவியேற்பு விழா நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத்தலைவர் செல்வம், மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சராக பாஜக ஜான்குமார் ராஜ்நிவாஸில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் அமைச்சர் ஜான்குமார் தனது எம்எல்ஏ அலுவலகத்தில் நாளை மதியம் ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி அன்னதானம் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜான்குமார் அமைச்சராக இந்து முன்னணி எதிர்ப்பு: பாஜக எம்எல்ஏ ஜான்குமார் அமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து முன்னணி மாநில செயலர் மணிவண்ணன் கூறுகையில், “புதுச்சேரி பாரதி வீதி காமாட்சி அம்மன் கோயில் சொத்துகளை சட்டவிரோதமாக போலி பத்திரம் மூலம் ஜான்குமார் எம்எல்ஏ அபகரித்த சொத்துகளை மீட்டுதரவேண்டும். கோயில் சொத்துகளை அபகரித்தவருக்கு அமைச்சர் பதவி அளித்து தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும்நாளை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.” என்றார்.