சென்னை: புதிதாக பணிக்கு சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேபி பிரசாத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ரூ.3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.99.45 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் ஆக. 1 முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (பிஎப்) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல்முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை இரு தவணைகளாக வழங்கப்படும்.
இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தொழில் நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.3,000 வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.