தமிழக, கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டையில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார வளைவு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. இங்கு, ரூ.33 லட்சத்தில் புதிய வளைவு கட்டப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் இருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, செங்கோட்டை தாலுகா தமிழகத்தோடு 1956-ம் ஆண்டு இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத் தின் சின்னமான சங்கு வடிவ முத்திரை மற்றும் தலா 5 அடி உயரத்தில் இரு துவார பாலகர்கள் சிலையுடன் கூடிய அலங்கார வளைவு அக்காலத் தில் செங்கோட்டை நகரில் அமைக்கப்பட்டிருந்தது. செங்கோட்டை நகரின் அடையாளமாகவே பல நூறு ஆண்டுகளாக இந்த அலங்கார வளைவு விளங்கி வந்தது.
சமீபகாலமாக கேரளாவுக்கு பயணிகள் மற்றும் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் விபத்து ஏற்பட்டு இந்த அலங்கார வளைவு சேதமடைந்த நிலையில், இடியும் தருவாயில் இருந்தது. இதனால், இந்த வளைவை இடித்து விட்டு, பழமை மாறாமல் புதிய வளைவு கட்ட வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பழமைவாய்ந்த அன்றைய திருவாங்கூர் மன்னரால் கட்டப்பட்டதும், காவல் தெய்வங்களாக இருக்கக்கூடிய இரு துவார பாலகர் சிலைகளை அகற்றி விடாமலும், 16 கண் ரயில்வே பாலத்தை கேரள அரசு எவ்வாறு புனரமைப்பு செய்ததோ, அதுபோல் தமிழக அரசும் பழமை மாறாமல் இந்த அலங்கார புதுப்பிக்க வேண்டும் என இங்குள்ள பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த நுழைவு வாயில் வளைவை இடித்துவிட்டு, புதிய ஆர்ச் கட்டப்படும் என, செங்கோட்டை நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டது. இந்த வளைவை இடிக்க கூடாது என்று வலியுறுத்தி, பாஜக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சூழலில் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணர் முரளி, தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழினியன், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர். சேதமடைந்துள்ள நூற்றாண்டு கண்ட பழமை வாய்ந்த வளைவை இடிப்பதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
இதையடுத்து, ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வளைவு நேற்று இடிக்கப்பட்டது. இதனால், செங்கோட்டை நகருக்குள் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் கணக்குப்பிள்ளை வலசை, பண்பொழி, விஸ்வநாதபுரம் வழியாக இயக்கப்பட்டன. 150 ஆண்டுகள் பழமையான வளைவு இடிக்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் ரூ.33 லட்சம் மதிப்பில் புதிய அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.