தமிழகத்தில் நேற்று கட்சியை தொடங்கியவர்கள் கூட தொழிலாளர்கள் குறித்து எதையும் பேசவில்லை, என சிஐடியு மாநில தலைவர் சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு போக்குவரத்துக் கழக மெய்யனூர் பணிமனை எதிரே 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், போக்குவரத்து சங்கத்தின் மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், சிஐடியு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் பங்கேற்றுப் பேசியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்துப் பணப் பலன்களும் கிடைக்காமல் போராட்டம் ஓயாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நேற்று கட்சியை தொடங்கியவர்கள் கூட தொழிலாளர்கள் குறித்து எதையும் பேசவில்லை. சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்தில், அவர்களின் ஒற்றை கோரிக்கை கூட அமல்படுத்தப்படாமல் உள்ளது. குறைந்தபட்ச கூலி கூட தரவில்லை. ஆனால் தற்போது சுழற்சி முறையில் விடுமுறை என நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தில் சென்னையில் மட்டும் 5 பணிமனைகளை தனியார் மயமாக்கிவிட்டனர். தமிழகத்தில் காண்ட்ராக்ட் முறையில் அமல்படுத்தினால், அனைத்து கான்ட்ராக்ட் தொழிலாளர்களையும் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலைதான் மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அதிக அளவில் வைத்துள்ளனர். அவர்களையும் ஒன்றிணைத்து சிஐடியு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமூக நீதி என்ற பெயரில் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். போக்குவரத்து துறையை உருவாக்கிய கருணாநிதி, இதனை எப்போதும் தனியார் மயமாக்க விடமாட்டோம் என்றார்.
ஆனால், இப்போதைய ஆட்சியாளர்கள் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கி வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக விரைவில் தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும், என்றார்.