‘புகையிலை இல்லாத இளைஞர்கள்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிகரெட், இதர புகையிலை பொருட்கள் தடுப்பு (2003) சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை, புகையிலை பொருள் விளம்பரத்துக்கு தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை புகைப்படம் அச்சிடுவது, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரையும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2008 அக்டோபர் 2-ம் தேதி முதல் கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை சட்டமீறலில் ஈடுபட்ட 3.89 லட்சம் பேருக்கு ரூ.6.83 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 45,374 பள்ளிகள், 2,153 கல்லூரிகள் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாகவும், 1,240 கிராமங்கள் புகையிலை இல்லா கிராமங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட திருத்தம் கொண்டுவந்து, தமிழகம் முழுவதும் புகைகுழல் கூடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ், கடந்த 2024 செப்டம்பர் 24-ம் தேதி முதல் நவம்பர் 23-ம் தேதி வரை 60 நாட்களுக்கு இளைஞர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு புகையிலை தடுப்பு சட்டம் மற்றும் புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டத்தை (2.0) சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தேசிய சுகாதாரம், குடும்ப நலத் துறையின் தேசிய மதிப்பாய்வு கூட்டத்தின் போது, தமிழகத்துக் கு மத்திய சுகாதார அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து, இந்த விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.