மதுரை: ‘புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் போய் உத்தரவு வாங்கி வருமாறு கூறினால் காவல் நிலையங்கள் எதற்கு?’ என்று உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு மதுரை மாவட்டம் அய்யன்கோட்டை, நகரியில் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து பொருட்களை வாகனங்களில் ஏற்றி, இறக்க 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், எங்கள் குடோனுக்கு வந்த தனிநபர்கள் சிலர் குடோனில் உள்ள பொருட்களை நாங்கள் தான் வாகனங்களில் ஏற்றி, இறக்குவோம் எனக் கூறி தகராறு செய்து வருகின்றனர்.
இதனால் முறையாக தொழில் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. கடந்த பத்து நாட்களாக லாரிகளில் உள்ள பொருட்களை இறக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் குடோனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், “குடோன்களில் பொருட்களை குறிப்பிட்ட நபர்கள்தான் ஏற்றி இறக்குவோம் என உரிமை கோர முடியாது. அதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் அங்கு போலீஸார் உடனடியாக சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்,” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “குடோனில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை தாங்கள் தான் இறக்குவோம் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் இளங்கோவன், சேகர், முத்தையா ஆகியோர் உரிமை கொண்டாடியுள்ளனர். இப்பணிக்கு அவர்கள் கூடுதல் ஊதியத்தையும் கேட்டு உள்ளனர். இது சம்பந்தமாக சோழவந்தான் போலீஸ் சார்பு ஆய்வாளர் முருகனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் உயர் நீதிமன்றம் போய் உத்தரவு பெற்று வருவதாக கூறியுள்ளார். இதுதான் போலீஸ் நடத்தை என்றால், ஒவ்வொரு ஊரிலும் காவல் நிலையம் அமைக்க எந்த தேவையும் இல்லை. போலீஸாரின் சேவை குறைபாடுகள் மற்றும் சோம்பல் அணுகுமுறை குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உடனடியாக குடோனில் பொருட்களை இறக்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.
பின்னர் போலீஸார் தரப்பில், “மனுதாரரின் குடோனில் பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தை பார்க்கும் போது மனுதாரரைப் போல் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.