சென்னை: பிஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஹார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இச்சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.