சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலத்தவர்களை நீக்குவதை பிஹாரில் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்களை சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் வெளிநாட்டவரை, சட்டத்துக்கு புறம்பாக தங்கி இருப்பவர்களை, இறந்தவர்களை, முகவரி மாறி சென்றவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதை எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் வெளி மாநிலத்தவரை சேர்க்கக் கூடாது என்கிறார்கள்.
இவர்களது அரசியல் நியாயம் தான் என்ன? ஒரு மாநிலத்தில் வாழக் கூடியவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார்கள், எந்த சூழ்நிலையில் வாழ்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் வாழ்கிறார்கள், என்பதை எல்லாம் பார்த்து தான் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பார்கள்.
அந்த கடமை தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக வட மாநிலத்தவரை சேர்க்கக் கூடாது என்று சொன்னால் எந்த வட மாநிலத்தவரை, எப்போது வந்தவர்களை? தமிழகத்தின் கலாச்சாரத்தோடு ஊறிப்போன வட மாநில மக்களையும் சேர்த்து சொல்கிறீர்களா?
இதுபோன்று பேசுவது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பரவி வாழும் தமிழ் மக்களை நம் சொந்தங்களை பாதிக்காதா? திடீரென்று இவர்களுக்கு இந்த ஞானோதயம் வரக் காரணம் என்ன? கடந்த தேர்தல்களில் இவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெற்று வருகிறார்கள். அப்படி இருக்கையில், இந்த திடீர் பயம் எப்படி வந்தது? இதுவும் ஒரு விதமான பிரிவினை எண்ணம் தானே? பிஹாரில் நியாயமான முறையில் நீக்குவதை ஏற்க மறுத்தும், தமிழகத்தில் நீக்க சொல்லியும் ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.