நன்னிலம்: “பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? ‘அப்பா’ என்று சொன்னால் மட்டும் போதுமா?” என்று திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை முன்வைத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் பேருந்து நிலையம் பகுதியில் தொண்டர்கள், மக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டம், செழிப்பான விவசாய மாவட்டம். இந்த மண் புனிதமான மண். இரவு, பகல், வெயில், மழையில் உழைத்து உணவு உற்பத்தி செய்கிறார்கள். எது வேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம், உணவில்லாமல் இருக்க முடியாது. அதனை உருவாக்கும் விவசாயிகள் இந்த மாவடத்தில் வாழ்வதும் அங்கு நான் இருப்பதும் பெருமையாக உள்ளது.
ஸ்டாலின் 200 தொகுதிகள் வெற்றி கிடைக்கும் என்று கனவு காண்கிறார். நன்னிலம் எழுச்சிக் குரல், ஸ்டாலின் செவிகளில் விழுகிறபோது அதிமுக 210 வெல்லும் என்பது உறுதியாகிறது. உதயநிதியிடம் இதை பற்றி கேள்வி கேட்டார்கள். அவரால் பதில் பேச முடியவில்லை. பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்துவிடுகிறார்கள். திமுகவில் உறுப்பினர்கள் குறைந்துவிட்டனர். அதனால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று மக்களை சந்திக்கிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். திமுக பரிதாபமான நிலைக்கு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி இரண்டு பேரும் பொறுப்பேற்றதில் இருந்து திமுக வலுவிழந்துவிட்டது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று 46 திட்டங்களை 45 நாட்களில் தீர்த்துவைப்பேன் என்று சொல்கிறார். சிதம்பரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடக்கிவைத்தார். நான்காண்டுகள் என்ன செய்தீர்கள்? அப்படியென்றால், இன்னமும் மக்களிடம் நிறைய பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா ஸ்டாலின்? இத்தனை பிரச்சினை இருக்கிறது என்றால், அது சிறப்பான ஆட்சியா? மோசமான ஆட்சி.
எதிர்க்கட்சியாக இருந்தபோது இப்படித்தான் புகார் பெட்டி என்று திட்டத்தை ஊர் ஊராக கொண்டு சென்றார். மனுக்களை பெட்டிக்குள் போடச் சொல்லி, ஆட்சிக்கு வந்ததும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார். அப்புறம் எதற்கு இது? மக்கள் நான்கு வருடங்களுக்கு முன்னாடியே பிரச்சினைகளை சொல்லிட்டாங்களே, ஏன் தீர்வு காணவில்லை? மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் பாருங்கள். ‘சதுரங்க வேட்டை’ படம் போல ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார். ஒருமுறை ஏமாந்துட்டீங்க, இன்னொருமுறை ஏமாறாதீங்க.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதுதான் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாங்க. உங்க நிலத்தை பறிக்கவும் புடுங்கவும் திட்டம் போட்டவர் ஸ்டாலின். அதே நேரத்தில் நிலத்தை பாதுகாத்து, இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். இனி எத்தனை ஆண்டுகளானாலும் எந்தக் கொம்பனாலும் உங்க பூமியை எந்தத் திட்டத்துக்கும் தொடக்கூட முடியாது. விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தது அதிமுக அரசு. உங்கள் பூமியைக் காத்த அதிமுக கட்சிக்கு துணை நிற்க வேண்டும். நானும் விவசாயி, உங்களோடு துணை நிற்பேன். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு அதுபோல விவசாயிகள் பாதிப்பின் போது அதிமுக துணை நின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் இங்கு வந்து வீர வசனம் பேசினார். நானும் டெல்டாகாரன் என்றார். மேட்டூர் தண்ணீர் திறந்தார். ஆனால், பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்க்கவில்லை. அதற்கான இழப்பீடு கொடுக்கவில்லை. ஆனால் அதிமுக அரசில் தான் 12,000 கோடி ரூபாய் பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். 50 ஆண்டு காலம் காவிரி நீர் பிரச்னையை உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல தீர்ப்பு பெற்றுக் கொடுத்தோம்.
இங்கு பருத்தி அதிகமா விளைகிறது. ஆனால், நியாயமான விலை கிடைக்கவில்லை இங்க வியாபாரிகள் சிண்டிகேட் போட்டு அவர்களே கொள்முதல் செய்கிறார்கள் என்பது என் கவனத்துக்கு கொண்டு வந்ததும் உடனே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எல்லாம் வந்து பேசி, வெளியூர் வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள். அதனல் 52 ரூபாய் பஞ்சு, இன்று 74 ரூபாய்க்கு விற்கிறது. அதிமுக தான் குரல் கொடுக்கிறது. அதனால் பருத்திக்கு நியாயமான விலை கிடைத்தது.
இதற்கு குரல் கொடுக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி ஜால்ரா போடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் தனித்தன்மையை இழந்துவிட்டது. என்றைக்கு கைநீட்டி திமுகவிடம் பணம் வாங்கினார்களோ, அன்றைக்கே கட்சிக்கு செல்வாக்கு போயிடுச்சு. இதை நீங்க மறைக்க முடியாது. திமுகவே சொல்லிவிட்டது. பணம் வாங்கியதால் மவுனம் சாதிக்கிறீங்க. மக்கள் பிரச்னையை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்குறீங்க. பஞ்சு விலைக்கு அதிமுக போராட்டம் நடத்தியது, கடைகோடிக்கு தண்ணீர் வரலை அதுக்கு ஏதாவது போராட்டம் நடத்துனீங்களா?
போராட்டம் நடத்தினால் திமுக சீட் குறைத்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள். குறை சொல்ல வேண்டும் என்பதல்ல, எதார்த்தனமான நிலையைச் சொல்கிறேன். கம்யூனிஸ்ட் வரலாறு படைத்த இயக்கம், மாசுபட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன். கம்யூனிஸ்ட் தேய்ந்து கொண்டிருக்கிறது அதுதான் வேதனை அளிக்கிறது. மக்கள் பிரச்னைக்கு அவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மை திட்டம் கொண்டுவந்தோம். குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரினோம், வண்டல் மண் இயற்கை விவசாயத்துக்கு பயன் பட்டது. இதுதான் அதிமுக ஆட்சி. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரும் வழியில் காவிரியில் நான்கு தடுப்பணை கட்ட நினைத்தோம் ஆட்சி மாறிவிட்டது. திமுக அதனை கண்டுகொள்ளவில்லை.
டாஸ்மாக் ஒரு பாட்டிலில் 10 ரூபாய் ஊழல். ஒரு நாளுக்கு 15 கோடி, மாதம் 450 கோடி, வருடம் 5,400 கோடி ரூபாய் மேலிடம் போகிறது. இப்படி கொள்ளையடித்தது தான் ஸ்டாலின் சாதனை. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே முன்பு சொன்னார், சபரீசனும் உதயநிதியை 30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு விழிக்கிறார்கள் என்று சொன்னார். அப்பவே அவ்வளவு என்றால் இப்போது எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்..?
சூப்பர் முதல்வர் என்கிறார். அதாவது கொள்ளை அடிப்பதில் சூப்பர் முதல்வர். நன்னிலம் தொகுதிக்கு ஏதாவது ஒரு திட்டம் கொடுத்திருக்கிறாரா? தில்லு, திராணி இருந்தா என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். எதுவுமே செய்யவில்லை, போட்டோ ஷூட் எடுத்தே நாலு வருஷம் ஓட்டிவிட்டார். திட்டத்துக்கு ஒரு பேர் வைப்பார், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், முதல்வரின் முகவரி திட்டம், இப்ப உங்களுடன் ஸ்டாலின். எல்லாம் ஒரே திட்டம் தான். உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் ஸ்டாலின் சாதனை. அதிமுக அரசு உங்க அரசு, அது உங்க கட்சி. அதிமுக நன்மை செய்யும் கட்சி, திமுக கொள்ளையடிக்கும் கட்சி.
இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப்பொருள், கஞ்சா இல்லாத இடமே இல்லை. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. அப்பா என்று சொல்கிறார்… பிள்ளை கதறும்போது எங்கே போனார் அப்பா? அப்பா என்று சொன்னால் மட்டும் போதுமா? இப்படிப்பட்ட அரசு தேவையா? ஸ்டாலின் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு.
நான் வேண்டுமென்றே வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறேன் என்கிறார். நான் பொய் சொல்கிறேனா..? உண்மைதான் பேசுகிறேன். நல்லாட்சியை நாங்கள் மீண்டும் கொடுப்போம். நன்னிலம் தொகுதியில் நிறைய திட்டம் அதிமுக ஆட்சியில் கொடுத்திருக்கிறோம். நன்னிலம் அரசு கலைக் கல்லூரி, குடவாசல் கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து நிலையம், தூர் வாரும் பணிகள், நெல் சேமிப்பு கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பாலங்கள் என நிறைய கொடுத்திருக்கிறோம். உங்களுக்குதான் ஒண்ணும் தெரியாதே, பொம்மை முதல்வரே.
நன்னிலம் உணவு பதப்படுத்தும் பூங்கா, அரசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல் என நிறைய கோரிக்கைகள் கூறியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்துகொடுப்போம். மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக. மிரண்டு ஓடப்போவது திமுக. பை பை ஸ்டாலின்” என்றார் எடப்பாடி பழனிசாமி.