டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் பேசியதாவது: முதல்வரின் சீரிய தலைமையில் தொழில் துறை மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் மாணவர் சேர்க்கை விகிதம் 48-ல் இருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட, சட்டம் – ஒழுங்கு சீராக இருக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால், மற்ற மாநிலங்கள்போல, பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. இக்கட்டான சூழல்களை சமயோசிதமாக கையாள, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் உரிய ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பேசும்போது, ‘‘காவல் துறையில் புலன் விசாரணைக்கு என தனிப் பிரிவு உருவாக்க கோரியதை ஏற்று, டிஜிபி சங்கர் ஜிவால் நிறைவேற்றினார். எதிர்காலத்தில் இத்திட்டம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்’’ என்றார்.
என்றென்றும் காவல் துறைக்கு உதவியாக, உறுதுணையாக இருந்ததாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சங்கர் ஜிவால் தனது ஏற்புரையில் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில், டிஜிபி (நிர்வாகம்) ஜி.வெங்கட்ராமன், அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கோகுல கிருஷ்ணன், பிரதாப், ராஜ் திலக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.