சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் நல்வழிகாட்டுதலின்படி இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5-வது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர் பாபு தலைமையில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து எம்டிசி பேருந்துகள் இயக்குவது தொடர்பாகவும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவது தொடர்பாகவும் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்க சாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் பணிகள் துவங்கவுள்ளதால், தற்காலிக பேருந்து நிலையத்திற்கான மாற்று இடங்களை தேர்வு செய்ய அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “75 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த பிராட்வே பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர், தொகுதி சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மல்டிலெவல் கார் பார்க்கிங்காக மாற்றுவோம் என உறுதி அளித்திருந்தார். யாரும் எதிர்பார்க்க முடியாத வகையில், ரூ.870 கோடி மதிப்பீட்டில், பிராட்வே பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடனும் புதுப்பிக்கப்பட இருக்கிறது.
பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் தற்போது இடிக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் இந்தப் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பயணிகள் சவுகரியமாக பயணிக்க இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களாக ராயபுரம் கிளைவ் பேக்டரி அருகிலுள்ள இடத்திலும் மற்றும் தீவுத்திடல் என இரண்டு இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வள்ளலார் பேருந்து நிலையமும் தமிழக முதல்வர் தலைமையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட இருக்கிறது. அங்கே தினசரி சுமார் 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் தொடங்கும்போது, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி 5-வது மண்டல அலுவலகம் எதிரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் மற்றும் டான்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள மற்றொரு இடம், இரண்டு பிரிவுகளாகப் பிரித்து அந்த இடங்களில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், மேயர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் குமர குருபரன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், எம்டிசி மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், துணை ஆணையாளர் (பணிகள்) சிவ கிருஷ்ண மூர்த்தி, ஆர்டிசி ரவி, போக்கு வரத்து துறை, காவல் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ, மாநகராட்சி, சென்னை குடிநீர், மின்சாரத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தொடங்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேவையான அனைத்து சிறப்பம்சங்களைச் சேர்ப்பதற்கான உத்தரவை பெற்று, அறிவுரையின் பேரில் இந்தப் பணிகள் தொடங்கப்படும்” அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மேயர் பிரியா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.