சென்னை: தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய ஜவுளி கடையாக தொடங்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்கி பிரபலமானது.
சென்னை தி.நகர் நாகேஷ்வரராவ் சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, ஜி.என்.செட்டி தெருவில் உள்ள ஜவுளிக் கடை, தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள கடை, குரோம் பேட்டையில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான நகை கடையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் ராஜா அண்ணாமலை புரத்தில் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நீலாங்கரையில் உள்ள உரிமையாளரின் மகன்கள் வீடுகளிலும் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இங்கு சொத்து தொடர்பான பத்திரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல், கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளி கடைகளிலும் நேற்று காலை முதல் சோதனை நடந்தது. திருச்சியில் மேலரண் சாலையில் உள்ள ஜவுளிக்கடை, என்எஸ்பி சாலையில் உள்ள நகைக்கடை, மதுரை மேலமாசி வீதியிலுள்ள ஜவுளிக் கடைமற்றும் கடை மேலாளர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களிடம் வரி ஏய்ப்பு புகார் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இக்கடைக்கு சொந்தமான ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட 2 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடந்தது. நெல்லை டவுனிலுள்ள ஜவுளி கடையிலும், அருகில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான பர்னிச்சர் கடை, நகைக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டையில் உள்ள உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையிலும் வருமான வரித்துறையின் உதவி ஆணையர் தலைமையில் சோதனை நடந்தது. தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், அனைத்து இடங்களிலும் சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழு விவரங்களை வெளியிட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.