தூத்துக்குடி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடிக்கு விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழா மற்றும் தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்துவைக்கிறார். மேலும், பல்வேறு திட்டப்பணிகளை திறந்துவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் நாளை இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். விழா முடிந்து இரவு 9.30 மணியளவில் தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். இதையொட்டி, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய விமான படை விமானத்தை தரையிறக்கி சோதனை நடத்தப்பட்டது.
மேலும், பிரதமர் பங்கேற்கும் விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகம் முழுவதும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
அதேபோல, விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பார்வையிட்டனர். இன்று (ஜூலை 25) முதல் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.