சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அண்மையில் பாஜக முன்னெடுப்பில் மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், அதேபோன்ற ஆன்மிக நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவை இந்தாண்டு சிறப்பாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை நிகழாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் 5 நாள் விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷகாவத் விழாவை தொடங்கி வைக்கிறார்.
நிறைவு நாளான ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும், அவர் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, 28-ம் தேதி பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடியின் வருகை குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, “பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. கடந்த தேர்தலின்போது நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் ராமநாதபுரம் தொகுதியில் இருந்தது. இறுதியில் வெற்றி பெற்றது திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனிதான்.
தமிழகத்தில் எல்லா புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று மோடி பிரார்த்தனை செய்கிறார். அவர் தமிழகத்தில் என்ன செய்ய நினைத்தாலும் வேலும், முருகனும் திமுகவில்தான் இருக்கிறார்கள். கடந்த முறை 5 படை வீடுகளில் திமுக வெற்றி பெற்றது. பாஜகவின் முருகன் மாநாட்டுக்குப் பிறகு வரும் தேர்தலில் அறுபடை வீடுகளிலும் திமுக வெற்றி அடையும்” என்றார் அவர்.