சென்னை: தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிஅது: “பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகிறார். அவர் தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் செய்த துரோகங்களை கண்டித்து, அவர் தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பள்ளி கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுக்கிறார். தமிழ் மொழி நீண்ட நெடிய பாரம்பரியம், வரலாற்றை கொண்டுள்ளது. உலகின் மூத்த மொழியாக திகழ்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தமிழ் மற்றும் திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைத்து புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த உண்மையான அறிக்கையை மாற்றி எழுதி தரும்படி அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். தமிழகத்தின் உண்மையான வரலாற்றை வெளியிட மறுக்கிறார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பிறகு 3. தேர்தல்களை சந்தித்துள்ளார். இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசே நிதி ஒதுக்குகிறது. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பானிடம் கடன் வாங்குகிறது. இவற்றையெல்லாம் கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இந்திரா காந்தி ஒரு நாள் பிரதமராக இருந்தாலும், நாட்டு மக்கள் நலனுக்காக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இந்திரா காந்தி இரும்பு பெண்மணி என உலக நாடுகள் போற்றி பேசியது. அதிக நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்து மோடி அப்படி என்ன தியாகம் செய்துவிட்டார்?” என்றார் செல்வப்பெருந்தகை.