மதுரை / தென்காசி: பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, அவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால் கட்டாயம் ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தென் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது எதற்காக என்று தெரியவில்லை. அவர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்புவரை, செல்போன் மூலமாக பேசிக் கொண்டுதான் இருந்தேன். அவர் விலகியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான், கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அவர் கூறுவது பற்றி எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லியிருந்தால், நான் அனுமதி வாங்கித் தந்திருப்பேன். பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால்தான் ஓபிஎஸ் வெளியேறினார் என்று கூறுவதில் உண்மையில்லை. அவர் வெளியேறியது கூட்டணிக்கு பலவீனமா என்பது தேர்தலின்போதுதான் தெரியவரும்.
தமிழக முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சொந்த விஷயத்துக்காகவும், தொகுதி பிரச்சினைக்காகவும் அவர் சந்தித்திருக்கலாம். நான்கூட சொந்த பிரச்சினைக்காக முதல்வரை சந்திக்கலாம். பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது, அவரை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டால், கட்டாயம் பெற்றுத் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
அவசரம் நல்லதல்ல… முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதானமானவர். எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து முடிவு செய்வார். ஆனால், தற்போது அவசரப்பட்டு முடிவு எடுத்தது சரியல்ல.
சாதிய கொலைகள் கண்டிக்கத்தக்கவை. மண்ணில் வாழ்வதற்கு அருகதையற்றவர்கள்தான் இதுபோன்ற கொலைகளை செய்வார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவைக்கு 2026 ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கும். தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் பணிகளை தொடங்குவார்கள். ஆனால், தோல்வி பயம் காரணமாக, திமுக 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.