அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு அவர் வருகை தந்தார். அங்கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலுக்கு வந்தார். வரும் வழியில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டப்படி ரசித்து பார்த்தார்.
விழா மேடையில் பிரதமர் மோடியுடன் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் சிதம்பரம் எம்.பி. திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றனர். தொடர்ந்து மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன், பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்றிருப்பது பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.
இந்த விழாவுக்கு முன் திருமாவளவன் கூறுகையில், “நம் வீட்டு நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். அவரை வரவேற்க வேண்டியது தமிழர்களின் மரபு. அந்த வகையிலேயே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த மண்ணின் மைந்தன் – மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் அளித்த பேட்டியில், “ராஜாராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அறிவிக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்றார்.