சென்னை: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விமரிசையாக கொண்டாடினர்.
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின்கீழ் நமது தேசம் உருமாறி, ஒவ்வொரு குடிமகனையும், விளிம்புநிலை மக்களையும் மேம்படுத்தும் வகையிலான உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்த்தெடுத்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி மாற்றத்தை ஏற்படுத்தும் பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: மக்களால் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பழம்பெரும் புகழ் கொண்ட நம் பாரத தேசத்தை திறம்பட ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடிக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையும், தேசத்துக்கான அயராத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்கள் சேவைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பணியாற்றும் தன்னலமற்ற தேசியவாதி பிரதமர் மோடி, நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு நம் தேசத்தை வழிநடத்திச் செல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தமிழக பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.