புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில், ‘நமது பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தொலைநோக்கு தலைமை, அயராத உழைப்பு மற்றும் தேசத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு தொடர்ந்து லட்சக் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மனதில் நிறுத்தி மக்கள் சேவைக்கு தன் வாழ்வையே அர்பணித்து மூன்றாவது முறையாக பிரதமராக சிறப்பாக செயலாற்றும் மக்கள் தலைவன், எளிய பின்னணியில் பிறந்து எட்டுத்திக்கிலும் போற்றப்படும் சரித்திர நாயகர், தேசப்பற்றை மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்ட பெரும் தேசியவாதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் தாரக மந்திரத்துடன் பணியாற்றும் தன்னலமற்றவர், கடந்த பதினொரு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் பாரதத்தை சாதனைபுரியச் செய்த ஈடு இணையற்ற தலைவர், தாய்மொழியாக இல்லையென்றாலும் திக்கெட்டும் தமிழின் புகழ் பரப்பும் பற்றாளர் போன்ற எண்ணற்ற புகழ்களுக்குச் சொந்தக்காரரான பிரதமர் மோடிக்கு நமது தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் மேலும் பல்லாண்டு நமது பாரத தேசத்தை அவர் வழிநடத்திச் செல்ல வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாள் வாழ்த்து பதிவில், ‘ பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவை, நமது முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்கிறது.
நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் அவரை வலிமைப்படுத்தி இந்தியாவை மேன்மேலும் பெருமையை நோக்கி அழைத்துச் செல்ல பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன், நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் வெற்றி பெறவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ‘ பிரதமர் மோடிக்கு 75வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் தேசத்துக்கு சேவை செய்ய வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘ பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியமும், பலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்