திண்டுக்கல்: “பிரதமரின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் கூறியது: “அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியா முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 35 சதவீத ஆடைகள் அமெரிக்காவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தவறான வெளியுறவு கொள்கையே இதற்குக் காரணம். அமெரிக்க தேர்தலின்போது மோடி, ட்ரம்ப்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எந்த நாட்டின் பிரதமரும் மற்ற நாட்டுக்கு ஆதரவாக கத்துக்குட்டி போல் தலையிட்டு பிரச்சாரம் செய்யமாட்டார்கள்.
50 சதவீத பெட்ரோலிய இறக்குமதியின் காரணமாக பயனடைவது பாஜக, அதானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமே. ஆனால் பாதிப்படைவது சிறு, குறு தொழில் செய்பவர்கள் தான். நேற்று கடல் உணவுகள் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக, வேலைவாய்ப்பில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். மத்திய அரசு மந்தமாக செயல்படக் கூடாது. தொழில் துறையினரை அழைத்துப் பேச வேண்டும். மத்திய அரசு செய்ய வேண்டிய உதவியை செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மோடியின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன உதவியுடன் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆலோசனை மற்றும் ஆயுதங்கள் வழங்குகிற ஓர் அரசை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாம் ஏன் அங்கு போக வேண்டும். மோடி பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர். நாடாளுமன்றத்தில் சீனா என வாய் திறந்து மோடி பேசியது இல்லை. இப்படி பணிந்து சீனா போக வேண்டியது இல்லை.
பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது. வாக்குத் திருட்டை தடுத்தால்தான் இந்தியாவுக்கு நல்லது. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்பது கருப்பு சட்டம். ஊழல்கள் குறித்து ஏற்கெனவே வலுவான சட்டம் உள்ளது. 30 நாட்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். தற்போது பார்க்கிறோம் அமலாக்கத் துறை தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே அமலாக்கத் துறை அலுவலகமாக செயல்படுகிறது.
யார் வேண்டுமானாலும் பொய் வழக்கு போட்டுவிட்டு 30 நாட்கள் சிறையில் வைத்து பதவியை பறிக்கலாம். ஒருவர் தவறு செய்திருக்க வேண்டும். அது நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். பின் தண்டனை பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களை யாரும் காப்பாற்ற போவதில்லை.
தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுகிறது. இதற்காக எம்.பி சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார். சர்வாதிகார அரசு பண்டைய காலங்களில் இருந்து தற்போது வரை வீழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வரலாறு. விஜய், காங்கிரஸ் கட்சி குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு ஓட்டு மட்டுமே இருக்கிறது. ஆனால், அதையும் பாஜக திருடுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இல்லை.
இந்தியாவை வலுவான நாடாக காங்கிரஸ் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா என்ற தேசமே சின்னாபின்னமான சூழலில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை என நான் நினைக்கிறேன்” என்றார். தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் நடந்த மகளிர் சிறப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.