பல்லாவரம்: இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை முதல்வர் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளேன். கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.
ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதில், உணவும் உடையும் எளிதாக கிடைத்துவிடலாம்; ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது. நிலம்தான் அதிகாரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும் – தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான். அதனால்தான், பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்.
சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும்,பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதை இந்த அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. 5 மாதத்துக்குள் 5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம். ஆனால், ஐந்தே மாதத்தில் 7 லட்சத்து 27,606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது.
இந்த ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தற்போது வரை மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். பல லட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம். தென்குமரி முதல் சென்னை வரை சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம். வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம். இதனால்தான், 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு நம் திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. விரைவில் இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும்.
பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில், மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையின் உச்சத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அவர்களின் நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார். அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான். இந்த அடிப்படைகூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதல்வர்கள் சாதிக்க முடியாததை இந்த ஸ்டாலின் சாதித்துக்கொண்டிருக்கிறானே. இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.
திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இந்திய நாடே தமிழகத்தை திரும்பிப் பார்த்து, ‘இதுதான் வளர்ச்சி இதுதான் வழி’ என்று சொல்லும் அளவுக்கு நிச்சயமாக செயல்படுவோம். அதை நீங்கள்எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழக மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.