சென்னை: பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய பாஜக அரசு அமைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது.
அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற இந்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். அதனால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.
இதேபோல, போர் நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததும், அதற்கு அவர் கூறிவரும் காரணங்களும் பிரதமர் மோடியின் பிம்பத்தைப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிட்டன.
இவ்வாறு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை மாற்றுவதற்காகவும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர்ப்பதற்காகவும்தான் இந்த தூதுக் குழுக்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
மேலும், தூதுக் குழுக்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால், பாஜக அரசு பின்பற்றி வரும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.