சென்னை: பிரதமரின் மறைந்த தாய் குறித்த அவதூறு கருத்துக்கு பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பிரதமர் மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஒருவரை அரசியல்ரீதியாகத் தாக்க அவரது தாயை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது. பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா? வயதான பெண்களை கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்த இண்டியா கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா? இச்சம்பவத்துக்கு உடனடியாக இண்டியா கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து நாட்டின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து எதிர்க்கட்சியினர் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. முற்றிலும் தவறானது. இப்படி ஒரு அவதூறான கருத்தை தெரிவித்ததை ஆர்.ஜே.டி தலைவரும், காங்கிரஸ் தலைவரும் கண்டிக்காதது அரசியல் அநாகரிகத்தை எடுத்துக்காட்டுகிறது.
தெய்வத்துக்கு சமமாக நினைக்கும் மறைந்த தாயாரை, மறைந்த தலைவர்களை பற்றி தேர்தல் பிரச்சாரத்தின்போது அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த அநாகரிகமான போக்கை கண்டிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.