சென்னை: நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் இஓஎஸ்-09 உள்ளிட்ட 6 செயற்கைக் கோள்கள் வரும் 18-ம் தேதி பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
விவசாயம், பேரிடர் மேலாண்மை, நீர்வளம், மீன்வளம், காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் மூலம் மே 18-ம் தேதி காலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 5 சிறிய செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில், முதன்மை செயற்கைக்கோளான இஓஎஸ்-09 மொத்தம் 1,170 கிலோ எடை கொண்டது. இதில் சி-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார் கருவி உள்ளது. இதன்மூலம் இரவு – பகல் என எந்த நேரத்திலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லிய படங்களை எடுக்கமுடியும்.
புவி கண்காணிப்பு மட்டுமின்றி, நாட்டின் எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான முக்கிய தகவல்களை இது வழங்கும். ஏற்கெனவே அனுப்பப்பட்ட ரிசாட்-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த அதிநவீன செயற்கைக்கோள் அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.