மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற அமர்வு ரத்து செய்தது.
தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.
இந்த முறைகேடு தொடர்பாக பால்வளத் துறையின் அப்போதைய இயக்குநர் சி.காமராஜ், ஆணையர் வள்ளலார் (இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள்) மற்றும் கூடுதல் பால் ஆணையர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர் இந்த குற்றச்சாட்டில் இருந்து காமராஜ், வள்ளலார் விடுவிக்கப்பட்டனர். கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி கிறிஸ்துதாஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து, “முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காமராஜ், வள்ளலார், கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் கிறிஸ்துதாஸ் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. சாதாரண அரசு ஊழியர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால், இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு தடை கோரி காமராஜ், வள்ளலார் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டனர்.
பின்னர் நீதிபதிகள், “ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. தனி நீதிபதி மனுதாரர்கள் இருவருக்கும் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.