சென்னை: பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு ஆண்டுகளாக காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் யூத இனவெறி இஸ்ரேல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. மறுபுறம், காசாவிற்குள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல் பட்டினிப் போரை தொடுத்து வருவதாலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டாலும், பசியாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் செத்து மடிந்துள்ளனர்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று காசா நகரத்தை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி காசா மீது தீவிர தாக்குதலை நடத்திய இஸ்ரேலுக்கு அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று காசா நகரம் முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவரும் திட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், காசா நகரை கைப்பற்றும் திட்டத்திற்காக மேலும் 60,000 ரிசர்வ் படைகளை காசாவுக்குள் அனுப்புகின்ற திட்டத்தையும் அங்கீகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று மக்கள் நெருக்கமாக உள்ள காசா நகரத்தின் சைதூன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தரைவழி தாக்குதலை தீவீரப்படுத்தியது. ஏற்கெனவே, காசாவில் இருந்த 19 லட்சம் மக்களை வெளியேற்றி விட்டு காசாவின் 90 சதவிகிதப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், காசா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் உள்ள பத்து லட்சம் மக்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி, காசாவின் அல்-மவாசி மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வருகிறது.
அப்பகுதிகளிலிருந்து தெற்கு சூடான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்துப் படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி, காசாவை திறந்தவெளி வதைமுகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்தை அழிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்துக்கொண்டு காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவதுதான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது. “போர் நிறுத்தத்திற்கு தயார்” என்று ஹமாஸ் பலமுறை தெரிவித்துவிட்டப் போதிலும், அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு உடன்படாமல், நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு போரைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150-க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்ததைப் போல, பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலுள்ள லட்சக்கணக்கான மக்களை யூத இனவெறி இஸ்ரேல் அரசு நம் கண் முன்னே இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பொழுது உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் கையறு நிலையில் வேடிக்கை பார்த்தன. அதே போன்று இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. காசா மீதானப் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகளோடு இணைந்து இந்தியா முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.