விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று தொழிசங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதாலும், கடைகள் திறக்கப்பட்டதாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் விருதுநகரில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2,312 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோதப் போக்கு மற்றும் தேசவிரோத கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அதையடுத்து, 10 மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு நாடு தழுவிய பொது வேலை நிறத்தப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்கள், அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதையொட்டி, விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள அஞ்சலகம் முன் தொழிற்சங்கத்தினர் இன்று மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 367 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆர்.ஆர். நகரில் மறியலில் ஈடுபட்ட 36 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று, அருப்புக்கோட்டையில் இரு இடங்களிலும், காரியாபட்டி, ராஜபாளையம், கீழராஜகுலராமன், சேத்தூர், சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழையிரம்பண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு மற்றும் ரெட்டியபட்டி என மொத்தம் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 1,243 பெண்கள் உள்பட 2,312 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. போக்குவரத்துத் துறையில் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு பதில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயங்கின. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. வங்கிகள், பி.எஸ்.என்.எல் மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்தறை, பொதுப்பணித்துறை, அங்கன்வாடி ஊழியர்கள் 2,300 பேரும், அரசு பள்ளி ஆசிரியர்கள் 486 பேரும் விடுப்பு எடுத்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.