சென்னை: நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர ஜாக்டோ – ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில மையம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்தில் இணைகின்றன. இதனால் அரசு சேவைகள், வங்கி சேவைகள், பொது போக்குவரத்து சேவைகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
‘நோ ஒர்க் நோ பே’- இந்நிலையில், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச்செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
விடுப்புகள் அனுமதிக்கப்படாது: இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அரசாணையில், இந்த நாளில் மருத்துவ விடுப்பு தவிர்த்து தற்செயல் விடுப்பு மற்றும் இதர விடுப்புகள் அனுமதிக்கப்படாது என்றும் அரசு ஊழியர்களுக்கான பணி நடத்தை விதிகளை மீறக்கூடாது என்றும் அனைத்து துறைகளும் காலை 10.15 மணிக்கு துறைகளில் ஊழியர்களின் வருகை விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே பேருந்து சேவையில் பாதிப்பு இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறை செயலர் பணீந்திர ரெட்டி அனுப்பிய கடிதத்தில், ‘அட்டவணைப்படி பேருந்து இயக்கப்படுவதை கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க வேண்டும்.
பணிமனைக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பேருந்து இயக்கத்தை தடுக்கும் சம்பவம் நேர்ந்தால் உடனடியாக மாவட்ட சட்ட ஒழுங்கு அதிகாரிகளை அணுக வேண்டும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பேருந்து இயக்கம் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் வார ஓய்வு எடுக்க வேண்டாம் என்றும் அதை ஈடு செய்ய மற்றொரு நாள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராதவர்கள் மீதும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு தூண்டி விடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.