கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர்.
எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை கடந்த மார்ச் 25-ம் தேதி மாலை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ் தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் விழுந்தன. இந்த இல்லம் புராதண முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க பொதுமக்களிடம் யாசகம் பெற்று மாநில அரசுக்கு நிதி வழங்க உள்ளோம் என ஒன்றிய பாஜக தலைவர் டி.சரவணக்குமார் அறிவித்தார். இது தொடர்பாக கடந்த சனிக்கிழமை வட்டாட்சியர் சுபா தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தையில் தொல்லியல் துறை, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லையென கூறி, பாஜகவினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர்.
ஜூன் 30-ம் தேதி, பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க பொதுமக்களிடமிருந்து யாசகம் பெற்று அந்த நிதியை மாநில அரசுக்கு அனுப்பி வைப்போம் என பாஜகவினர் தெரிவித்தனர்.
அதன்படி, இன்று மாலை ஆன்மிக பிரிவு மாவட்ட பொறுப்பாளர் ராம்கி, இளம்புவனம் பாஜக கிளைச் செயலாளர் காளிராஜ் உள்ளிட்டோர் பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு எதிரே உள்ள பிரதான பஜாரில் உள்ள கடைகளுக்கு சென்று யாசகம் பெற்றனர்.
அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் கோபால் தலைமையிலான போலீஸார், பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்து, யாசகம் பெற்ற பாத்திரத்தையும் கைப்பற்றினர்.
இதனிடையே, பாரதியார் மணிமண்டபம் முன்பு, பாஜக ஒன்றிய தலைவர் டி.சரவணக்குமார், மாநில பொதுச்செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட துணை தலைவர் ஆத்திராஜ், நெசவாளர் அணி அமைப்பாளர் நாகராஜன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய கண்ணன் உள்ளிட்ட பலர் பாரதியார் இல்லத்தை புதுப்பிக்க வலியுறுத்தி கோஷமிட்டு, யாசகம் பெற புறப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.