சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவில், 9-வது நாளான நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாரதியார் பாடலை பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்தனர்.
இந்தியாவோடும், தமிழகத்தோடும் நெருங்கிய கலாச்சார தொடர்புகொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றன.
கலை, கலாச்சாரம், நாடகம், பொருளாதாரம், உணவு என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி அடையாறு பத்மநாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் இந்திய – சிங்கப்பூர் ஓவிய – சிற்பக் கண்காட்சியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கிவைத்தார். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், உலகப் புகழ்பெற்ற ஓவிய, சிற்பக் கலைஞர்களான சிங்கப்பூரைச் சேர்ந்த குமாரி நாகப்பன், பி. ஞானா, மகாலட்சுமி கண்ணப்பன், ஆர்யன் அரோரா, இந்தியாவைச் சேர்ந்த கவிதா பத்ரா உள்ளிட்ட கலைஞர்களின் படைப்புகளை கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில், சிங்கா 60 கலைத் திருவிழாவின் 9-வது நாளான நேற்று இரவு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் கலையரங்கத்தில் ‘பாரதியார்-பார்வையிலும், குரலிலும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நிகழ்வாக ‘நல்லிணக்கத்தில் பாரதியார்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர்-இந்தியா இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதில் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’, ‘மலரின் மேவு திருவே’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’, ‘நல்ல காலம் வருகுது’, ‘வெண்ணிலாவே’, ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா’ ஆகிய பாடல்களை பாடினர். பார்வையாளர்கள் மெய்மறந்தும், உடன் சேர்ந்து பாடியும் வெகுவாக ரசித்தனர்.
இதைத் தொடர்ந்து, பாரதியாரின் ஆன்மிக பயணம் தொடர்பாக சவுந்தர்யா சுகுமார் ஐயர் தயாரித்துள்ள ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதில் பாரதியாரின் குழந்தைப் பருவம், மாணவப் பருவம், காசியில் மேற்படிப்பை தொடர்ந்தது, நிவேதிதை உடனான சந்திப்பு, அதன்மூலம் பெண் அடிமைத்தனத்தை புரிந்துகொண்டது, பத்திரிகையாளராக புதிய அவதாரம் எடுத்தது, தேசபக்தி பாடல்களை எழுதத் தொடங்கியது, புதுச்சேரி வருகை மற்றும் அரவிந்தர் உடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பான அரிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அக்காட்சிகளை பார்வையாளர்கள் வியந்து பார்த்து ரசித்தனர்.
நடிகை சுஹாசினி, மாண்டலின் யூ ராஜேஷ், அனில் ஸ்ரீனிவாசன், சவுந்தர்யா சுகுமார் ஐயர், லலிதா வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். `இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சிகளை இளங்கோ குமணன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், `இந்து தமிழ் திசை’ இயக்குநர்கள் அகிலா விஜய் ஐயங்கார், லட்சுமி ஸ்ரீநாத், விஜயா அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
இன்று நிறைவடைகிறது: பல்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் சென்னைவாசிகளை மகிழ்வித்து வந்த சிங்கா 60 கலைத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. தி.நகர் தியாகராய சாலையில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் (ஸ்கை) சிங்கப்பூர் உணவுத் திருவிழாவும் இன்றுடன் நிறைவடையும்.