தருமபுரி: தன் எதிரிகளை சிதைக்க வேண்டும் என்பதற்காக, வலிமையாக உள்ள பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது என தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தருமபுரியில் இன்று (ஜூலை 1-ம் தேதி) தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது பேசிய எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், ‘சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து அவதூறான சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. பாமக தலைமையில் அண்மைக் காலமாக நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி அருள் எம்எல்ஏ சுய லாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது இன்றைய வளர்ச்சியும், அடையாளமும் பாமக கொடுத்தது என்பதை மறந்து விட்டு செயல்படுகிறார்’ என்றார்.
தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி கூறும்போது, ‘பாமக-வில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடான சூழலை பயன்படுத்தி சேலத்தைச் சேர்ந்த பாமக எம்எல்ஏ அருள், பாமக தலைவர் அன்புமணியை கவுரவக் குறைவாகவும், சிறுமை படுத்தும் விதமாகவும் ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பேசி வருகிறார். அவரது பேச்சு மொத்த பாமக-வினரையும் வேதனைக்கும், கோபத்துக்கும் உள்ளாக்கி உள்ளது. அவர் பேசியதை உழவர் பேரியக்கம் சார்பில் கண்டிக்கிறோம். பாமக-வின் எதிர்காலம் அன்புமணி ராமதாஸ் தான்.
அவரை அவதூறாக பேசும் அருள் இந்த கட்சியில் தொடருவாரா? திமுக தூண்டுதலின் பேரில் பாமக-வை பலவீனப்படுத்த அருள் இவ்வாறு செயல்படுகிறார். மேலும், அவர் வேறு கட்சிக்கு செல்லும் நோக்கத்துடன் இவ்வாறு பேசுகிறார். கட்சியின் நிறுவனருக்கும் தலைவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்களை விரைவில் களைந்து 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். ஆனால், எம்எல்ஏ அருளின் விருப்பம் வேறாக உள்ளது.
அருள் ஓர் அரசியல் வியாபாரி, தரகர். தன் உயிருக்கு அன்புமணி ஆதரவாளர்களால் ஆபத்து என்றும் கூறி வருகிறார். ஏற்கெனவே ஒருமுறை இரவில் தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக மருத்துவமனையில் அட்மிட் ஆனார். போலீஸ் விசாரணையில், தனது ஓட்டுநரை வைத்து தாக்கச் செய்து அருள் நடத்திய நாடகம் தெரிய வந்தது. அதைப்போலவே இப்போதும் ஏதாவது நாடகம் நடத்திவிட்டு அன்புமணி ஆதரவாளர்கள் தான் காரணம் என்றும் கூற வாய்ப்புள்ளது.
உலகத் தலைவர்களே பாராட்டும் தலைவரான அன்புமணியை விமர்சிப்பதை அருள் நிறுத்தி விட்டு, கட்சியை பலவீனப்படுத்தும் தனது கனவையும் மறக்க வேண்டும். இனியும் அவர் இதேபோன்று செயல்பட்டால் பாமக-வினர் பதிலடி கொடுப்போம்’ என்றார்.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில் கூறும்போது, ‘பாமக-வின் இரு தலைவர்கள் இடையிலான உரசல் மற்றும் விரிசல் விரைவில் சரியாகும் என கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆனால், ஒருசிலர் இந்த மோதலால் ரத்தம் சிந்த வேண்டும், அந்த ரத்தத்தை ஓநாய் போல குடித்து வாழ்வோம் என கருதுகின்றனர். வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் தங்களால் வெற்றி பெற முடியாது என திமுக-வினருக்கு தெரிந்துவிட்டது. அதனால் தன் எதிரிகளை சிதைக்கும் நோக்கத்துடன், குறிப்பாக வலிமையாக உள்ள பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அனைவரின் காலிலும் விழும் எம்எல்ஏ அருள் சுயமரியாதை இல்லாதவர்.
இவ்வாறு நடந்து, சுயமரியாதை இயக்கமான பாமக-வை சிறுமை செய்கிறார். அருள் மீது பாமக தலைவர் அன்புமணி உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயக்கத்தை விட்டு செல்பவர்கள் தலையில் இருந்து விழுந்த முடி என பெரியார் கூறுவார். எம்எல்ஏ அருளை நாங்கள் அப்படித்தான் பார்க்கிறோம்’ என்றார். இந்நிகழ்ச்சியின்போது, கட்சி நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, செல்வம், அரசாங்கம், வணங்காமுடி, சண்முகம், பெரியசாமி, முருகசாமி, மாது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.