காஞ்சிபுரம்: “பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளெல்லாம் ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான். 7 மாதத்தில் திமுக ஆட்சி முடிவடையும். அதற்கு ஏற்ப கூட்டணி அமைப்போம்.” என்று அதிமுக இலக்கிய அணிச் செயலர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் பகுதி வாழ் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளைக் கூட முறையாக செய்து தராமல் இருப்பதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இலக்கிய அணிச் செயலர் வைகைச் செல்வன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டச் செயலர் வி.சோம சுந்தரம், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் உத்திரமேரூர் நகர செயலர் ஜெய விஷ்ணு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. உத்திரமேரூர் பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகல் கூட செய்து தரவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பின் அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறதா ? இல்லையா ? என்று நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த வைகைச் செல்வன், “போக போகத் தெரியும்” என்று பாட்டுபாடி பாமக நிறுவனர் ராமதாஸை போல் கிண்டலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய வைகைச் செல்வன், “பொது எதிரியை வீழ்த்த தான் கூட்டணி. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான். 7 மாதத்தில் திமுக ஆட்சி முடிவடையும். அதன் பின்னர் சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைப்போம்”. என்றார்.
கூட்டணி ஆட்சி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, “அதற்கு எடப்பாடி பழனிசாமி ‘நோ’ சொல்லிவிட்டார்” என்று வைகைச் செல்வன் கூறினார்.