ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலையில் உள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவே இல்லை.
கடந்த சில மாதங்களாக தினந்தோறும் ஊடகங்கள் முன்பு அன்புமணியை விளாசி வருகிறார் ராமதாஸ். கட்சியில் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் அறிவிக்கின்றனர். ராமதாஸின் எதிர்ப்பை மீறி நடைபயணத்தை தொடரும் அன்புமணி, பொதுக்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல, அன்புமணிக்கு போட்டியாக பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தி காண்பித்திருக்கிறார் ராமதாஸ். இப்படி இரு தரப்பிலும் தினமும் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
ராமதாஸின் கோபம் என்ன?
கட்சி தொடங்கியது முதலே மாற்றி மாற்றி கூட்டணி என்ற விமர்சனங்கள் இருந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் பாமகவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் காய்நகர்த்துவார் ராமதாஸ். 2016 சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்சி அன்புமணியின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதே தனித்து நின்று சாதித்து காட்டுவதாக தந்தையிடம் உறுதி சொல்லித்தான் களம் கண்டார் அவர். ஆனால், அந்தத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி உட்பட அனைவரும் தோற்றனர். 2019 மக்களவைத் தேர்தலிலும் பாமக தோற்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டும் பாமக வென்றது.
தொடர் தோல்விகளால் பாமகவுக்கான மாநிலக் கட்சி அங்கீகாரமும், அதிகாரபூர்வ மாம்பழ சின்னமும் கைநழுவிப் போய்விட்டது. இதனை எப்படியாவது மீட்க வேண்டும் என 2024 மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் திட்டம் தீட்டினார். இதற்காக அதிமுகவோடு கூட்டணி அமைக்கவும் கணக்கு போட்டார். 7 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா இடம் என ராமதாஸ் பேச்சுவார்த்தையை இறுதி செய்திருந்த நேரத்தில், திடீரென பாஜக கூட்டணியில் சேர்ந்தார் அன்புமணி. தேர்தல் ரிசல்டும் ஜூரோவானது. இது இருவருக்குள்ளும் பெரும் கசப்பை உண்டுபண்ணியது.
மக்களவைத் தேர்தலில் பலத்தை நிரூபித்து விசிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், இருந்த அங்கீகாரத்தை மீட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பாமக தொண்டர்கள் மட்டுமல்ல, ராமதாஸுக்கும் ஏற்பட்டது. தனது சொல்படி அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தால், எப்படியும் 2 தொகுதியிலாவது வென்றிருக்கலாம், ஒரு ராஜ்ய சபா சீட்டும் பெற்றிருக்கலாம். 3 எம்.பிக்கள் கட்சிக்கு கிடைத்திருப்பார்கள். மாநில கட்சி அங்கீகாரமும் மீண்டிருக்கும் என்பதே ராமதாஸில் கோபத்துக்கு காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனால், ராமதாஸை சில குள்ளநரிகள் இயக்குகின்றனர். அதனால்தான் அவர் இப்படி பேசுகிறார் என்று சொல்லிவருகிறார் அன்புமணி. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை வைக்கும் நிலையில், இக்குழப்பத்துக்கு முடிவு ஏற்படும் அறிகுறியே தெரியவில்லை. 2026 ஆகஸ்டு வரை நான் தான் தலைவர் என பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுவிட்டார் அன்புமணி. மகளிர் சங்க மாநாட்டில் ‘நானே வெற்றி கூட்டணி அமைப்பேன், யார் பேச்சையும் கேட்காதீர்கள்’ என்கிறார் ராமதாஸ்.
அதுபோல இவர்களின் சமீபத்திய பேச்சுகளையும் ஆழமாக கவனிக்க வேண்டும். ‘தமிழக வரலாற்றிலேயே மக்கள் வெறுக்கும் ஒரு ஆட்சி ஸ்டாலினின் ஆட்சி, திமுகவை வீழ்த்துவதே இலக்கு’ என்கிறார் அன்புமணி. ஆனால், ‘20% இட ஒதுக்கீடு தந்தவர் அருமை நண்பர் கலைஞர், ஸ்டாலின் 10.5% உள் ஒதுக்கீடு தரவேண்டும்’ என சொல்லியுள்ளார் ராமதாஸ்.
மேலும், திமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கும் ‘இல்லை’ என நேரடியாக பதில் சொல்லவில்லை ராமதாஸ். அப்படி பார்க்கையில் அன்புமணி திமுக பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை. ஆனால், பாமகவை வெற்றி பெற வைக்க எந்த முடிவெடுக்கவும் தயாராக உள்ளார் ராமதாஸ்.
ஒரு கட்சி என்றால் ஒரு தலைவர்தான். ஆனால், இருவருமே தங்களை தலைவர் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே மகாராஷ்டிராவில் சரத் பவார் நிறுவிய என்சிபி கட்சியை, அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் உடைத்தது போல பாமகவிலும் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அன்புமணி அணி அதிமுக – பாஜக கூட்டணியிலும், ராமதாஸ் அணி திமுக கூட்டணியிலும் இணையவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தேர்தல் நெருக்கத்தில் 10.5% இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை திமுக வெளியிடவும், அதனை வரவேற்று ராமதாஸ் திமுகவுக்கு ஆதரவளிக்கும் படலங்களும் நடக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தந்தை – மகனுக்கு இடையே நடக்கும் இந்த யுத்ததில் வெல்லப்போவது யார் என்பதே இப்போதைய கேள்வி